Wednesday, March 9, 2011

10 03 2011

இப்பவெல்லாம் சாதி யாரு பார்க்குறாங்க?
நல்ல பதிவு
சாதியை பெயரின் பகுதியாக பயன்படுத்தும் வழக்கம் நூறு ஆண்டுகளாக இல்லை. (என் தந்தை பிறந்த வருடம்: 1913; அவர் தந்தையின் SSLC சான்றிதழில் பெயரில் சாதி இருக்காது திண்டுக்கல் : 1900 -ம் ஆண்டு என நினைக்கிறேன்). ஐம்பதுகளில் அறுபதுகளில் நான் பள்ளியில்/கல்லூரியில் இருந்த காலங்களில் சாதி உடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியாது. விடுதியில் தந்தை ஊரிலிருந்து வந்துவிட்டால் குழூஉக்குறி வைத்து சில முறை சாதி இதுவாக இருக்கலாம் என ஊகிக்கலாம். ஆனால் சாதி பற்றி பேசுவதோ, கேட்பதோ வெட்கப்படும்படியான விஷயம் என பொதுவாக மாணவர்கள் நினைத்த காலம். நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலே கூட, நண்பனின் வீட்டுக்கு சென்றால், இருக்கும் பகுதியைக் கொண்டு இதுவாக இருக்கலாம் என பேசிக்கொள்வது கேட்டிருக்கிறேன். பல நண்பர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன்; அவர்கள் என்ன சாதி என்று ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்ததில்லை. அது பற்றி நினைத்தாலே அநாகரிகம் என நினைக்கும் வண்ணம் சூழல் இருந்தது. அப்போதைய முதல் அமைச்சர் காமராஜ நாடார் என்று சரித்திரப் பயிற்சியில் எழுதியதற்காக என் நண்பன் முட்டியில் அடி வாங்கியது நினைவில் பசுமையாக இருக்கிறது. கலப்பு திருமணத்தைப் பற்றி பேசுவது பெருமை. முடிந்தவரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே பதின்ம வயதில் இருந்த பையன்கள் நினைத்தனர். நூறு ஆண்டுகளில் சாதி பிரிவினை இருக்காது என உள்ளத்தளவில் நம்பியவர்கள் நாங்கள்.
அப்படி இருந்த தமிழ்நாடு இன்று எப்படி ஆகி விட்டது? (நான் 1972 முதல் வெளி மாநிலங்களில் வசித்து வருபவன்; இடையில் மிகச் சில ஆண்டுகள் சென்னையில் வசித்தது தவிர. இப்போதும் வெளி மாநிலமே). .
அப்போது சாதி சங்கங்கள் நகரங்களிலே கூட இல்லையென நினைக்கிறேன். தொழில் முறை சங்கங்கள் இருக்கும்; மளிகைக்கடைகாரர்கள் சங்கம் போன்று: இதில் பெரும்பாலும் நாடார்களோ, கோமுட்டிகளோ இருக்கலாம். ஆனால் அது பற்றி பொதுவில் பேச்சு இருக்காது. அலுவல் கமிட்டியில், அனைத்து சாதிகளும் இடம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்வார்கள். போகப் போக இந்த உணர்வே இருக்காது என்று நம்பியவர்கள் நாங்கள்.
இப்போது வக்கீல்களில் இருந்து ஆசிரியர்கள் வரை,சாதி சங்கங்கள் வைத்து குரல் கொடுக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள்; கொடி பிடிக்கிறார்கள். தம் பிரிவு இனத்தவர் உயர்வு, பங்கு, பங்கு மறுக்கப் படுவது, அவர்களை கை தூக்கி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அவமானம். அதைவிடக் கொடுமை: அதைப் பற்றி வெளிப்பட கூச்சமில்லாது பேசுவது.
இப்போது ஆட்சியில் இருப்பவர் எங்களுக்கு கொஞ்சம் சீனியர் : கருணாநிதி, அன்பழகன் போன்று; அல்லது எங்கள் தலைமுறை: சிதம்பரம், துரை முருகன் போன்று. இவர்கள் பள்ளிகளில் கல்லூரிகளில் இருந்தபோது பேசிய மொழி வேறு; இவர்கள் பதவியைப் பிடித்தவுடன் அணுகும் முறை வேறு.
இது போன்ற பதிவுகளைக் காணும் போது நினைத்துப் பார்த்திருக்கிறேன்: நிலை இவ்வளவு மோசமாகிப் போனதன் காரணம் என்னவோ ?
இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன: ஒன்று திராவிட கட்சிகளே எழுபது எண்பது சதவீதம்; காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் சுதந்திரா/ஜனதா போன்றவை இருபது இருபத்தைந்து சதவீதம். . அவர்களே சாதி ஒழிப்பைப் பற்றி சமூக உணர்வு என்று பெரியாரிசம் பேசி நாற்காலியைப் பிடித்தவர்கள் சாதி பிரிவினைகளை தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்பு நேரடியாகவும் ஊக்குவித்தது. இரண்டு அரசு வேளைகளில் ஒதுக்கீடு, அதன் காரணமாக அதன் சில கெட்ட விளைவுகள், பல நல்ல விளைவுகளை விட வீர்யமாக இருந்த கொடுமை. ,
இது என் சொந்தப் பார்வை. உங்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்
. http://amizhtha.wordpress.com/2011/03/04/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/#comment-166

No comments:

Post a Comment